முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.

இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்து சமயத்துடன் இணைந்தது.